தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி
தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும், தமிழ்நாடு மாநிலத்தில் தான் நடத்த வேண்டும் என்று பெப்சி புது விதிமுறைகளை விதித்துள்ளது. தமிழ் திரைப்படவுலகின் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சி'க்கு கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடத்தப்படும் படப்பிடிப்புகளில் பெப்சி ஊழியர்கள் தான் பணியாற்றுவார்கள். ஆனால் தற்போது ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நாயகர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள், வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் தான் நடத்தப்படுகிறது. இதனால் பெப்சி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து தமிழ் திரைப்படவுலகின் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டால் தயாரிப்பாளருக்கு உரிய பதிலினை அளிக்கவேண்டும்
இதனையடுத்து பெப்சி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "தமிழ் படங்களின் படப்பிடிப்பு தமிழகத்திலேயே நடத்தப்படவேண்டும். அவசியமில்லை என்னும் பட்சத்தில் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் படப்பிடிப்பினை நடத்தக்கூடாது" என்ற புது விதிமுறையினை கொண்டு வந்துள்ளது. அதேப்போல், தமிழ் நடிகர்கள் அண்மை காலமாக தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்படங்களில் தெலுங்கு நடிகர்களே அதிகம் நடிக்க வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக தற்போது, தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வைக்கப்பட வேண்டும் என்றும் பெப்சி அறிவுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. தொடர்ந்து குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டில் படம் எடுத்து முடிக்கப்படாவிடில் எழுத்துப்பூர்வமாக தயாரிப்பாளருக்கு உரிய பதிலினை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.