
நயன்தாராவின் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்திற்கு மற்றுமொரு சட்டச்சிக்கல்; சந்திரமுகி தயாரிப்பாளர்கள் வழக்கு
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாரா அவரின் ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்சில் வெளியிட திட்டமிட்ட நேரம், அவர் தொடர்ந்து சட்ட வழக்குகளை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் அவருடைய ஆவணப்படத்தில், 'நானும் ரவுடிதான்' திரைப்படக் காட்சிகளை பயன்படுத்த NOC தர மறுத்தார். அதையும் மீறி நயன்தாரா, பாடலின் வரிகளையும், BTS காட்சிகளையும் பயன்படுத்தவே, தனுஷின் Wunderbar நிறுவனம் அவரிடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்து தற்போது அது நடந்து வருகிறது. இந்த நிலையில் 'சந்திரமுகி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான AP இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.
புகார்
சந்திரமுகி தயாரிப்பாளர்கள் காப்புரிமை புகார்
'சந்திரமுகி'யின் காப்புரிமை உரிமையாளராக உள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஆவணப்படத்தில் தங்களுடைய உரிமையுள்ள காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என புகார் தெரிவித்துள்ளது. அவர்கள் மனுவில்,"நயன்தாராவின் ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும், மேலும், ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இரு வாரங்களில் பதில் தர உத்தரவிட்டுள்ளது.