எனது மௌனம் பலவீனத்திற்கான அறிகுறி அல்ல: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஜெயம் ரவியின் இந்த அறிக்கையையடுத்து, இது முழுக்க முழுக்க அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இது தன் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளியிட்ட ஒன்று என ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தனியார் ஊடகத்தினரிடம் ஜெயம் ரவி அளித்த பேட்டியில், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், 15 ஆண்டுகளில் தனக்கென ஒரு வங்கி கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீதித்துறை எனக்கான நியாயத்தை பெற்றுத்தரும்: ஆர்த்தி
ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் விஷயத்தை பற்றி பலர் பேசி வருகின்றனர். உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது என்னுடைய பலவீனமோ அல்லது குற்ற உணர்ச்சியோ அல்ல என்பதை வலியுறுத்துவது முக்கியமானது". "நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. நீதித்துறை எனக்கான நியாயத்தை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையோடு உள்ளேன்". "எனது முந்தைய அறிக்கையில் நான் கூறியவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்திக்க அனுமதி கோரியும் தற்போது அனுமதி கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.