கடும் அச்சுறுத்தல்களுக்கு பின்னும் '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விரும்பினார்: முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, '800' என்ற தலைப்பில் திரைபடமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து சமீபத்தில் முத்தையா முரளிதரன் அளித்த பேட்டியில், கடும் அச்சுறுத்தல்களுக்கு பின்னும் நடிகர் விஜய் சேதுபதி, '800' திரைப்படத்தில் நடிக்க விரும்பியதாகவும், தான் அதை தடுத்ததாகவும் கூறியுள்ளார். '800' திரைப்படத்தை, எம் எஸ் ஸ்ரீபதி இயக்கியுள்ளார். முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். ஆனால் அத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சர்ச்சையான நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல் வெளியானது.
கிளம்பிய சர்ச்சை
ஐபிஎல் போட்டியின் போது, முத்தையா முரளிதரன் தங்கி இருந்த விடுதியில் விஜய் சேதுபதியும் தங்கி இருந்தார். அப்போது '800' திரைப்படத்தின் கதையை விஜய் சேதுபதி கேட்டு, நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஈழப் போர் உச்சத்தில் இருந்த பொழுது, இலங்கை அரசுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் செயல்பட்டார் எனவும், அதனால் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் சர்ச்சை கிளம்பியது. சில அரசியல்வாதிகள் மற்றும் இயக்குனர்கள் விஜய் சேதுபதி '800' நடிக்க கூடாது என போர் கொடி தூக்கியதால், இது சர்ச்சையாக வெடித்தது.
அச்சுறுத்தல்களுக்கு பின்னும் நடிக்க விரும்பிய விஜய் சேதுபதி
இது குறித்து பேசிய முத்தையா முரளிதரன், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் கடுமையான அழுத்தங்கள் தரப்பட்டதாக கூறினார். இருப்பினும், படத்தில் நடிக்க விஜய் சேதுபதி விரும்பியதாகவும், இது ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் தான் எனக் கூறியதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். ஆனால், ஒரு இளம் நடிகரான விஜய் சேதுபதி இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி, தனது சினிமா எதிர்காலத்தை அழித்துக் கொள்ள வேண்டாம் என தான் கூறியதால் தான், '800' திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். விஜய் சேதுபதிக்கு பதிலாக, மாதுர் மிட்டல் '800' திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.