மிஸ் யுனிவர்ஸ் 2026 போட்டியிலிருந்து 15 நாடுகள் திடீர் விலகல்; பின்னணியில் நடந்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
உலக அளவில் பிரசித்தி பெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2026 அழகிப் போட்டியின் 75-வது பதிப்பு வரும் நவம்பர் 24 ஆம் தேதி புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நடைபெறவுள்ளது. போட்டித் தொடங்குவதற்கான கவுன்ட்-டவுன் ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் 15 நாடுகள் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆஸ்திரியா போட்டியாளர் விக்டோரியா அமர்சன் தனது மன மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி நவம்பர் 7 அன்று விலகினார். பல்கேரியா போட்டியாளர் அனா-மரியா பாபாவ் கார் விபத்தில் காயமடைந்ததாலும், செயின்ட் மார்ட்டின் பிரதிநிதி மேட்லி மரியன் தனிப்பட்ட காரணங்களாலும் விலகியுள்ளனர்.
விசா கட்டுப்பாடுகள்
அமெரிக்க விசா கட்டுப்பாடுகளால் வாய்ப்பை இழந்த ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள்
புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், அங்கு செல்வதற்கான அமெரிக்க விசா கிடைப்பதில் பல நாடுகளின் போட்டியாளர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேபாள பிரதிநிதி பிரயாஷ்னா குருங், ஜாம்பியா, காங்கோ குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் அழகிகள் விசா கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் அங்கோலா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் போட்டியாளர்களும் விசா கிடைக்காமல் தவித்து வருவதால் அவர்களின் பங்கேற்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
உரிமை சர்ச்சை
உரிம உரிமை சர்ச்சையால் பங்கேற்க முடியாத 6 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இந்த ஆண்டு போட்டியில் மற்றொரு முக்கியத் திருப்பமாக தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய 6 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அந்தந்த நாடுகளின் தேசிய உரிம உரிமைகள் தொடர்பாக ஜே.கே.என் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் ஈஸ்டர்ன் நிறுவனங்களுக்கு இடையே எழுந்துள்ள சர்ச்சையே இதற்கு காரணமாகும்.
இருப்பினும் இந்த 6 நாடுகளின் அழகிகளும் தங்களது தேசியப் பட்டங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கிரீடம்
3,150 வைரங்கள் பதித்த புதிய கிரீடமும் இந்திய பிரதிநிதி காசியா லிஸ் மெஜோவும்
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் 75-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், 18 காரட் வெள்ளைத் தங்கத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட புதிய கிரீடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தி ரேடியன்ஸ் ஆஃப் அன் எட்டர்னல் லெகசி (The Radiance of an Eternal Legacy) என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரீடத்தின் மையத்தில் உள்ள மூன்று வைரங்கள் போட்டியின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கின்றன.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கேரளாவை சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ கலந்துகொண்டு மகுடத்திற்காக போட்டியிடுகிறார்.