மெரி கிறிஸ்துமஸ்: இந்திய சினிமாவில் ஒரு சோதனை முயற்சி
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான கத்ரினா கைஃப் ஆகியோரது நடிப்பில் வரும் டிசம்பர்-12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம். இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனால் இயக்கப்பட்ட இந்தப் படத்திற்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு திரையுலகங்களிலும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கு முன்னர் பத்லாபூர் மற்றும் அந்தாதுன் ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கும் ஸ்ரீராம் ராகவனின் திரைப்படங்கள், வழக்கமான சினிமாவாக இல்லாமல் வித்தியாசமான அதே நேரம் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். தற்போது வெளியாகவிருக்கும் இந்த 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்திலும் பல்வேறு புதுமைகளையும், வித்தியாசமான முயற்சிகளையும் கையாண்டிருக்கிறார் அவர்.
இரு வேறு டிரைலர்கள்: புதிய முயற்சி
இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்திற்கான டிரைலர் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. வழக்கமாக பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கான டிரைலர்கள் ஒரே மாதிரியாக, வெவ்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கும். ஆனால், மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கு, இரு வேறு மொழிகளில் இரு வேறு டிரைலர்களை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். அந்தந்த மொழிக்கு ஏற்ற வகையில், கதாப்பாத்திரங்கள் முதல் குறியீடுகள் வரை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு காட்சியில் இந்தி டிரைலரில் இந்திய திரையுலக பிரபலம் ராஜேஷ் கண்ணாவின் குறியீடும், தமிழில் கமல்ஹாசனின் குறியீடும் இடம்பெற்றிருப்பது கவனிக்க வைக்கிறது.
இரு வேறு திரைப்படங்கள்?
இரு வேறு டிரைலர்கள் மட்டுமில்லாமல், இதனை இரு வேறு திரைப்படங்கள் என்றே சில நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். ஆம், ஒரே கதைக்களம், ஒரே முன்னணி நடிகர்கள், ஆனால் இரண்டு விதமான கதைப் போக்கு மற்றும் முடிவுகள் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர். இரண்டு மொழிகளில் வெளியாகும் மெரி கிறிஸ்துமஸ் படங்களிலும் ஒரே முன்னணி நடிகர்கள் தான், ஆனால் துணை நடிகர்கள் அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், படத்தின் போக்கும், தமிழ் டிரைலரில் த்ரில்லரைப் போன்று காட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியில் டார்க் காமெடி டோனில் காட்டப்படுகிறது. இதனால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.
நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்:
இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமானது ஒரு பிரபலமான நாவலைத் தழுவியே எடுக்கப்பட்டிருப்பதாகத் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் (அது எந்த நாவல் என எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை). ஆனால், டிரைலரைக் கொண்டே 1960-களில் வெளியான ஒரு குறிப்பிட்ட பிரெஞ்சு நாவலின் தழுவலாக இது இருக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'Bird in the Cage' என்ற நாவலை மையப்படுத்தியே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள், புதிய மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிரச் செய்கின்றன.
இந்திய சினிமாவில் புதிய முயற்சி:
முன்பே கூறியது போல, ஒரே கதைக்களம், இருவேறு துணை நடிகர்கள் மற்றும் இருவேறு முடிவுகள் என்ற வகையிலேயே வெளியாகவிருக்கிறது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம். உலக சினிமாவில் இது போன்று சோதனை முயற்சியில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்கான வெளியும் அங்கு இருக்கிறது. ஆனால், இந்திய சினிமாவில் இது போன்று வித்தியாசமான மற்றும் சோதனை முயற்சிகள் மிகவும் குறைவு. இதனை இந்திய சினிமா ரசிகர்கள் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொருத்தே இது போன்ற சோதனை முயற்சிகளுக்கான எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. இந்தப் பொங்கலில் 'மெரி கிறிஸ்துமஸை' நாமும் வரவேற்கலாம்!