பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை, டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அடுத்த மாதம் தனியார் விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யாவிற்கும், குணால் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும், ஆதிக் ரவிச்சந்திரனும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது குறித்து இரு தரப்பினர் சார்பிலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன்- அஜித் திரைப்படம் குறித்து இதுவரை தெரிந்த தகவல்கள்
ஆதித் ரவிச்சந்திரன் சமீபத்தில் இயக்கிய சயின்ஸ் ஃபிக்ஷன் படமான மார்க் ஆண்டனி திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. படம் ₹100 கோடி வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் 63வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு வேலைகளை கவனிப்பார் எனவும் பேசப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை இயக்குவதாக வெளியான பரபரப்புகள் அடங்குவதற்குள், அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.