இளையராஜா பாடல்கள் விவகாரம்: டியூட் படத்தில் இருந்து 'கருத்த மச்சான்' உள்ளிட்ட பாடல்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த பதிப்புரிமை வழக்கில், பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படத்தில் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்களை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பரபரப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பணக்காரன் படத்தில் இடம்பெற்ற 'நூறு வருஷம்' மற்றும் புது நெல்லு புது நாத்து படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' ஆகிய இரண்டு பாடல்களும் திரையரங்குப் பதிப்பிலிருந்து மட்டுமல்லாமல், தற்போது ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் டிஜிட்டல் பதிப்பிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். முன்னதாக, இந்தப் பாடல்களின் பதிப்புரிமைத் தனக்கே சொந்தமானது என்றும், பட நிறுவனம் சோனி மியூசிக்கிடம் உரிமை பெற்றதாகக் கூறுவது செல்லாது என்றும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவகாசம்
அவகாச கோரிக்கை நிராகரிப்பு
மேலும், பாடல்களைத் திரித்து (மாற்றி) பயன்படுத்தியது தனது உரிமையை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், பாடல்களை நீக்க 7 நாட்கள் அவகாசம் கேட்டதை நீதிபதி என்.செந்தில்குமார் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு நிராகரித்து, பாடல்களை பயன்படுத்துவதற்கான இடைக்கால தடையைப் பின்பற்றி உடனடியாக நீக்க உத்தரவைப் பிறப்பித்தது. படத்தின் லாப விவரங்கள் மற்றும் வசூல் தகவல்களையும் தாக்கல் செய்ய பட நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடல்களை நீக்கத் தவறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிப்பதற்கு உத்தரவிட்டு படத்தை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.