பப்ளிசிட்டி மேனேஜர் ஆனார் 'Sofa Boy': இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட காமெடி வீடியோ
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி(லவ் இன்சூரன்ஸ் கார்பொரேஷன்) என்ற படத்தை இயக்கி வருகிறார். 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான பிரதீப் ரங்கநாதன் இந்த எல்ஐசி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். டிசம்பர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. செவென் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், 'எல்.ஐ.சி' படத்தின் படப்பிடிப்பு தளத்தின் ஸ்னீக்-பீக் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சமூக வலைத்தளங்களில் சோபா விற்று பிரபலமான 'Sofa Boy' சிறுவன் முகமது ரசூல், படக்குழுவினரை விற்பது போல் காமெடி செய்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.