கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள புது NRI தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்
கோலிவுட்டில் பல நடிகர்கள், இயக்குனர்கள் அறிமுகமாவதை போல, தயாரிப்பாளர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்போதைய நிலவரப்படி, NRI தயாரிப்பாளராக கோலிவுட்டில் கோலோச்சி கொண்டிருப்பது லைகா நிறுவனம். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை போலவே தற்போது அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் BTG யூனிவெர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளது. ஐடி கம்பெனி நடத்தி வரும் பாபி பாலச்சந்திரன் என்பவர் இதன் நிறுவனர். அமெரிக்காவில் பெரும் புள்ளி என கருதப்படும் இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
டிமாண்டி காலனி 2 மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் பாபி
தொழிலதிபரான பாபி பாலச்சந்திரன் தமிழில் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் 'டிமாண்டி காலனி 2'. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிக்கும் இந்த படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தமிழில் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களான, ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களை வைத்து படமெடுக்க பாபி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 2025-ல் ரஜினியை வைத்து ஒரு படத்தை பாபி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் ரஜினியை நேரில் சந்தித்தும் இது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை பெருவெள்ள நிவாரண நிதிக்காக உதயநிதியிடம், இவரின் தயாரிப்பு நிறுவனம் ரூ.15 லட்ச ருபாய் நிதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.