பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்
செய்தி முன்னோட்டம்
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் எண்ணற்ற கிளாசிக் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 94), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தியறிந்து திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சிங்கீதம் சீனிவாச ராவின் மறைவு
நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடலுக்கு, நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து எக்ஸ் (X) தளத்தில் சிங்கீதம் சீனிவாச ராவுடன் தான் பணியாற்றிய பொன்னான தருணங்களை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார்.
அவரது அசாத்திய இளமைத் துடிப்பும் புதுமையான சிந்தனைகளும் எல்லோருக்கும் எளிதில் தொற்றிவிடாது.
அந்த உன்னத குணம் நமக்கும் தொற்றிக்கொள்ள வேண்டும் என்ற பெரும் தாகத்தோடும் ஆசையோடும் அவரது கையைப் பற்றி நடந்த நெருங்கிய நண்பர்களுள், அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றிய சீடர்களுள் நானும் ஒருவனாக உளேன்" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.