
சந்தாதாரர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோசினிமா!
செய்தி முன்னோட்டம்
ஜியோசினிமா தளம் தங்களுடைய ப்ரீமியம் சந்தாதாரர் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தற்போது, அத்தளத்தில் ஐபிஎல் மற்றும் இதர இந்திய உள்ளடக்கங்களை இலவசமாகவும், HBO மற்றும் வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த உள்ளடக்கங்களை சந்தாதாரர் சேவை முறையிலும் பார்க்கும் வகையில் புதிய சேவையை வெளியிட்டிருக்கிறது.
விரைவில், பிற இந்திய உள்ளடக்கங்களையும் கட்டணச் சேவைக்குள் அந்நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 4 சாதனங்களில் உயர்தர காணொளிகளைப் பார்க்கும் வகையில் ஒரேயொரு தேர்வை மட்டுமே கட்டண வசதி சேவையில் அளித்திருக்கிறது ஜியோசினிமா. இனி வரும் மாதங்களில் மேலும், சில தேர்வுகளை அந்நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோசினிமா
ப்ரீமியம் சந்தாதாரர் சேவை:
தற்போது ரூ.999 செலுத்தி பயன்படுத்தும் வகையில் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது ஜியோசினிமா.
ஜியோசினிமாவின் வலைத்தளத்தின் மூலமாகவோ அல்லது ஜியோசினிமா செயலியின் மூலமாகவோ ப்ரீமியம் சேவைக்கு சந்தா செலுத்திப் பயன்படுத்த முடியும்.
முன்னர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இருந்த லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் டிராகன், சக்சசன் உள்ளிட்ட தொடர்கள் தற்போது ஜியோசினிமா தளத்தில் ஒளிப்பரப்பாகின்றன.
ப்ரீமியம் சந்தா செய்தவர்கள் மட்டுமே மேற்கூறிய உள்ளடக்கங்களைக் காண முடியும்.
மோட்டோ ஜிபி, பாட்மின்டன், NBA பாஸ்கட்பால், லா லிகா மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுத் தொடர்களும் ஜியோசினிமா தளத்திலேயே ஒளிப்பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.