
பணத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர், பதிலுக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரும் நடிகர் ரவி மோகன்
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரவி மோகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனம், அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலாக நடிகர் ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கோரினார். இந்த வழக்கில், பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவி மோகனை ஒப்பந்தம் செய்திருந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் மார்ச் முதல் ஜூன் வரை நாள்கள் மாற்றப்பட்டது. ஆனால் எந்தவொரு கட்டத்திலும் படப்பிடிப்பு தொடங்கப்படாததால், மற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு தவறியதாகவும், மொத்தம் ரூ.9 கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் ரவி மோகன் மனுவில் கூறியுள்ளார்.
விசாரணை
நீதிமன்ற விசாரணை
இந்த வழக்கின் விசாரணையின் போது, நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "முன்பணம் திருப்பித் தர தயாராக இருந்தும், தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கால அவகாசம் கேட்டது. இதனால் மற்ற வாய்ப்புகள் தவறியது" என வாதிட்டார். மறுபுறம், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு பொருத்தமானதல்ல என்றும், ரவி மோகன் ஒப்பந்தத்துக்கு முரணாக 'பராசக்தி' என்ற படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பு நிறுவனம் 7 நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.