ஜெயிலர் திரைப்படம் வெளியீடு, கொண்டாட்டத்தில் தமிழகம்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமானது இன்று வெளியாகியிருக்கிறது. ஜாக்கி ஷெராஃப், பிரியங்கா மோகன், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். மலையாள நடிகர் மோகன்லால் இப்படத்தில் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாவதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் அமர்க்களமாகக் கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடாலான காவாலா, யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவு வசூல் மட்டும் இந்தியாவில் 13 கோடி ரூபாயையும், அமெரிக்காவில் 6 கோடி ரூபாயையும் கடந்திருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வரும் நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி ரஜினி ரசிகர் ஒருவர், மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு பூஜை செய்திருக்கிறார். சென்னை மற்றும் பெங்களூருவில் பல தனியார் நிறுவனங்கள், இத்திரைப்படத்தைக் காண ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருக்கின்றன. சில நிறுவனங்கள், ஒரு படி மேலே சென்று இலவச டிக்கெட்டுகளை தங்கள் ஊழியர்களுக்கு வழங்கியிருக்கின்றன. அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்ட ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனமானது, தங்கள் ஊழியர்கள் ஜெயிலர் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக 7 ஸ்கிரீன்களில் 2,200 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருக்கிறது. இந்தத் தகவலை அந்நிறுவன சிஇஓ, X தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி ரூபாய் சம்பளமாகக் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.