இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள் குறித்த தரவரிசையை, ஐஎம்டிபி(இணையத் திரைப்பட தரவுத்தளம்) வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 முதல் நவம்பர் 6, 2023 வரை இந்தியாவில் திரையரங்குகளில் வெளியான அனைத்து திரைப்படங்களிலும், சராசரியாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஐஎம்டிபி பயனர் மதிப்பீடு குறைந்தது 15,000 வாக்குகளுடன் இருந்த படங்கள் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த 10 திரைப்படங்களும் தொடர்ந்து ஐஎம்டிபி பயனர்களிடையே, மிகவும் பிரபலமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு முழுவதும் வாரந்தோறும் புதுப்பிக்கப்படும் ஐஎம்டிபி தரவரிசையிலிருந்து இருந்து, உண்மையான மற்றும் பிரத்தியேகமான தரவுகள் பெறப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் இடத்தில் ஜவான் திரைப்படம்
முதல் இடத்தை அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை ஷாருக்கானின் மற்றொரு படமான பதான் பெற்றுள்ளது. ரன்வீர் சிங்கின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறாவது இடத்தை பிடித்த ஜெய்லர்
ஐந்தாவது இடத்தை அக்ஷய்குமாரின் ஓஎம்ஜி 2 திரைப்படம் பெற்றுள்ள நிலையில், ஆறாவது இடத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் உள்ளது. காதர் 2 திரைப்படம் ஏழாவது இடத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய ஜி கேரளா ஸ்டோரி திரைப்படம் பிரபலமான இந்திய படங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. ரன்பீர் கபூரின்ன் தூ ஜூதி மெயின் மக்கார் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான போலா திரைப்படங்கள் முறையே ஒன்பது மற்றும் பத்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.