ராஜய்யா டூ இளையராஜா: தனது பெயர் மற்றும் பிறந்த நாள் மாற்றத்தின் ரகசியத்தை உடைத்த இசைஞானி
செய்தி முன்னோட்டம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,600-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து பாடியதுடன், உலகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தி, அகிலமெங்கும் இசையின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. 1970களில் தொடங்கி இன்று வரை தனது அசாத்திய இசையால் மக்களைத் தன்வசம் வைத்துள்ள இவரது 'இளையராஜா' என்ற பெயர் உருவான விதம் மற்றும் அவரது பிறந்த நாள் குறித்த சுவாரசியமான பல பின்னணித் தகவல்களை அவரே நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பெயர் வரலாறு
ராஜய்யா 'இளையராஜா' ஆன கதை!
தனக்குப் பெயர் சூட்டப்பட்ட வரலாறு குறித்துப் பேசிய இளையராஜா, "என்னுடைய அப்பா ஜாதகத்தைப் பார்த்து எனக்கு 'ஞான தேசிகன்' என்றும், பள்ளியில் சேர்க்கும்போது சுருக்கமாக இருக்கட்டும் என்று 'ராஜய்யா' என்றும் பெயர் வைத்தார்". "பின்னர் சென்னைக்கு வந்து, மேற்கத்திய இசை கற்றுக்கொடுக்கும் தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்தேன். எம்.எஸ்.வி, சி.ஆர். சுப்பராமன் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரும் அவரிடம் பயின்றவர்கள்தான். என் பெயரைக் கேட்ட மாஸ்டர், 'ராஜய்யா' நன்றாக இல்லை என்று கூறி 'ராஜா' என மாற்றினார்".
பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாசலம் சூட்டிய இளையராஜா
"தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்கள் நான் இசையமைத்த பாடல்களுக்காக கதை தயார் செய்து 'அன்னக்கிளி' என்ற படத்தை எடுத்தார்". "அப்போது, நான் ஏற்கெனவே இசையமைப்பாளர் கோவர்த்தனனுடன் சேர்ந்து 'கோவர்த்தன ராஜா' என்ற பெயரைப் பயன்படுத்தி வருவதாக அவரிடம் கூறினேன்". "ஆனால், ஏ.எம். ராஜா என்று ஏற்கெனவே ஒருவர் இருப்பதால் குழப்பம் ஏற்படும் எனப் பஞ்சு அருணாசலம் அதனை மறுத்துவிட்டார். 'பாவலர் பிரதர்ஸ்' என்ற பெயரையும் பழைய பெயர் என்று நிராகரித்தவர், இறுதியாக 'இளையராஜா' என்று பெயர் சூட்டினார். அப்படித்தான் இந்த பெயர் நிலைத்தது" என்று அவர் விவரித்துள்ளார்.
இசைஞானி
கலைஞருக்காக மாறிய பிறந்த நாள்!
இளையராஜா பண்ணைப்புரத்தில் ஜூன் 3-ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டு பிறந்தார். அதே ஜூன் 3-ஆம் தேதிதான் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளுமாகும். இது குறித்துப் பேசிய இளையராஜா, "தமிழ் மொழிக்கு கலைஞர் ஆற்றிய மாபெரும் பணியில் நான் ஒரு சிறு துளியைக்கூடச் செய்ததில்லை. நாங்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். எனினும், ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதிக்கு மட்டுமே அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும், ஒரே நாளில் இரு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்பதற்காக எனது பிறந்த நாளை ஜூன் 2-ஆம் தேதியே கொண்டாட முடிவு செய்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.