பேச்சுவார்த்தை தோல்வி- தொடரும் ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம்
ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி, நடிகர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. கடந்த மே மாதம், ஊதிய உயர்வு கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்கமான "ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா" வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனை தொடர்ந்து இதே பிரச்சனைகளை வலியுறுத்தி, ஹாலிவுட் நடிகர்கள் தொழிற்சங்கமான "ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் மற்றும் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ்" வேலை நிறுத்தத்தை அறிவித்தது. கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எழுத்தாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 மாதமாக தொடரும் நடிகர்கள் வேலை நிறுத்தம்
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நடிகர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததற்கு பின், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் முறையாக தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதியான "மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் ப்ரொடியூசஸ் கூட்டணியுடன்" பேச்சுவார்த்தை தொடங்கினர். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. "பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் இருந்த இடைவெளி மிகவும் அதிகமாக இருந்ததால் அதை தொடர்வது பலன் உள்ளதாக இருக்காது" எனக் கூறி தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தியதால் நடிகர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. அதே சமயம் நடிகர்கள் தொழிற்சங்கம், இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டதால் " ஆழ்ந்த ஏமாற்றத்தில்" உள்ளதாக தெரிவித்திருந்தது.