'மகாராஜா' படத்தில் சாச்சனாவின் நடிப்பைக் கண்டு வியந்த ஹாலிவுட் ஜாம்பவான் டாம் ஹாங்க்ஸ்
செய்தி முன்னோட்டம்
விஜய் சேதுபதி நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அப்படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனாவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினரான கவிதா குப்தா, 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்தச் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
பின்னணி
டாம் ஹாங்க்ஸிற்கு 'மகாராஜா' படம் சென்றடைந்த பின்னணி
சமீபத்தில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் தொகுப்பாளராக பங்கேற்று வரலாறு படைத்த நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவிதா குப்தா இந்தப் பேட்டியில் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் கலை அருங்காட்சியக விழாவில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்தபோது, சிறந்த மூன்று இந்தியத் திரைப்படங்களை பரிந்துரைக்குமாறு அவர் தன்னிடம் கேட்டதாகவும், அதில் 'மகாராஜா' திரைப்படத்தையும் தாம் பரிந்துரைத்ததாகவும் கவிதா குப்தா குறிப்பிட்டார்.
பின்னர் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு விழாவில் மீண்டும் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்தபோது, எவ்விதத் தூண்டுதலுமின்றி அவரே 'மகாராஜா' படம் குறித்துப் பேசியதாக கவிதா கூறினார்.
பாராட்டு
சாச்சனாவின் நடிப்பால் நெகிழ்ந்த டாம் ஹாங்க்ஸ்
அந்தச் சந்திப்பில் டாம் ஹாங்க்ஸ் தன்னிடம் முதலில் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த கவிதா குப்தா, "அந்தப் பெண்ணின் (சாச்சனா) நடிப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை; என்னவொரு அற்புதமான நடிகை! அந்தக் கதாபாத்திரத்தின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்னால் அப்படிச் செய்திருக்க முடியாது, அந்த நபரைக் கொன்றிருப்பேன்" என டாம் ஹாங்க்ஸ் உணர்ச்சிப்பூர்வமாகப் பாராட்டியதாகத் தெரிவித்தார்.
'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதியின் மகள் 'ஜோதி' கதாபாத்திரத்தில் நடித்த சாச்சனா, தனது அழுத்தமான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
'மகாராஜா 2'
ஹாலிவுட் ரீமேக் மற்றும் 'மகாராஜா 2' அப்டேட்
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்த 'மகாராஜா' திரைப்படம் சர்வதேச அளவில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கில ரீமேக்கில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, 'மகாராஜா' ஹாலிவுட் ரீமேக்கில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தமக்கு மிகுந்த விருப்பம் உள்ளதாகவும், இது குறித்துத் தயாரிப்பாளரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இயக்குநர் நித்திலன் சாமிநாதன் 'மகாராஜா 2' படத்தின் கதையைத் தன்னிடம் கூறியதாகவும், அது மிகவும் அழகாக உருவாகி வருவதாகவும் விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.