ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன?
பல முன்னணி தொழில்நுட்பங்கள், சிறந்த திரைக்கதைகள் என உலகமே வியந்து பார்க்கும் திரையுலகம் ஹாலிவுட். அங்கே இருக்கும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் நடிகர், நடிகைகளை கொண்ட Screen Actors Guild American Federation of Television And Radio Artists (SAG AFTRA )அமைப்பு ஏற்கனவே வேலையை விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் சங்கத்துடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளது. சம்பள பற்றாக்குறையினால், எழுத்தாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது நடிகர், நடிகைகளும் இதில் இணைந்துள்ளனர்.
சரிவை சந்திக்கும் ஹாலிவுட்
இந்த போராட்டத்தில் SAG இணைந்துள்ளதால், இதில் உள்ள உறுப்பினர்கள் யாரும் தங்களுடைய படம் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது. அது டப்பிங், நடனம், இசை போன்ற எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது. அதோடு புதிய படங்களிலும் ஒப்பந்தமாக கூடாது. அதுமட்டுமின்றி, போராட்டம் அறிவித்த பின்னர் வெளியாகும் எந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. அதன் தொடர்ச்சியாகத்தான், சமீபத்தில் வெளியான "Oppenheimer" என்ற கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக லண்டன் சென்றிருந்த படத்தின் நடிகர் நடிகையர், விழாவிலிருந்து கூட்டாக வெளியேறினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.