Page Loader
ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளுடன் நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு திரையுலக பயணம்!
நடிகர் ராஜேஷ் இன்று காலமானார்

ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளுடன் நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு திரையுலக பயணம்!

எழுதியவர் Venkatalakshmi V
May 29, 2025
02:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ஆசிரியர், எழுத்தாளர், டப்பிங் கலைஞருமான ராஜேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பன்முக நடிப்புத் திறன் கொண்ட நடிப்புக்கு பெயர் பெற்ற ராஜேஷ், போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 8:15 மணியளவில் அவரது வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ரசிகர்களை கவர்ந்த அவரது பன்முகப் பணிகள் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை இப்போது பார்ப்போம்.

திரைப்பயணத்திற்கு முன்

ஆசிரியர் வாழ்க்கையிலிருந்து திரையுலகிற்குள் ஒரு பயணம்

மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், பல இடங்களில் பள்ளிப்படிப்பை முடித்து, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சி முடித்த பின்னர், சென்னையின் பிரபல பச்சையப்பாஸ் கல்லூரியில் சேர்ந்தார். கல்வி நிறைவு செய்யவில்லை என்றாலும், 1972 முதல் 1979 வரை 7 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். புரசைவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு 1979-ம் ஆண்டு 'கன்னிப்பருவத்திலே' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டப்பிங் கலைஞர்

டப்பிங் கலைஞராக அறிமுகம்

அதன் பின்னர் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு 1979-ம் ஆண்டு 'கன்னிப்பருவத்திலே' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். அவர், 'டும் டும் டும்', 'மஜா', 'உள்ளம் கேட்குமே' ஆகிய திரைப்படங்களில் மலையாள நடிகர் முரளி மற்றும் 'பொய் சொல்ல போறோம்' திரைப்படத்திற்காக நெடுமுடி வேணுவுக்காக குரல் கொடுத்துள்ளார். 1979-ம் ஆண்டு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராஜேஷ், 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இயற்கையான நடிப்புக்கும், மென்மையான குரலுக்கும் பெயர்பெற்றவர்.

சின்னத்திரை

சின்னத்திரை பயணமும், யூடியூபர் அவதாரமும்

'அலைகள்', 'கணவருக்காக', 'ஆண்பாவம்', 'களத்து வீடு', 'கனா காணும் காலங்கள்', 'கார்த்திகை தீபம்', 'ரோஜா', உள்ளிட்ட எண்ணற்ற சின்னத்திரை தொடர்களிலும் ராஜேஷ் நடித்துள்ளார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் யூடியூபர் ஆன ராஜேஷ், தனது அனுபவங்களை பகிர்ந்து மக்களிடம் சிந்தனையை தூண்டும் விதமாக வீடியோக்கள் வெளியிட்டார். வெள்ளித்திரையில், சின்னத்திரையிலும் தான் சந்தித்த நபர்கள் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வந்தார்.

இலக்கிய பணி

இலக்கிய பணியில் எழுத்தாளராக 9 புத்தகங்கள்

ஒரு எழுத்தாளராக இலக்கிய உலகிலும் ராஜேஷ் கால்பதித்துள்ளார். அவர் எழுதிய 9 தமிழ்ப் புத்தகங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. 'முரண் சுவை' எனும் தலைப்பில் அவர் ஒரு நாளிதழுக்காக தொடராக எழுதியுள்ளார். மேலும், இந்திரா காந்தி, ஹிட்லர், காமராஜர், ஐன்ஸ்டைன், ஆட்ரே ஹெப்பர்ன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளையும், உலக திரைப்படங்கள், இயக்குநர்கள் பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார். இது தவிர அவருக்கு ஜோசியத்திலும் அனுபவம் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த ராஜேஷ், அதன் பின்னர் ஜோசியத்தில் நம்பிக்கை வந்ததன் கதையையும் தனது யூ ட்யூபில் பகிர்ந்துள்ளார்.