முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்
முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 28. கடந்த மாதம், ரிங்கி சக்மா, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார். முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி காலமானார். இது சார்ந்து ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரால் அந்த நோயிலிருந்து மீளமுடியாமல் இறந்துபோனார். ரிங்கி சக்மா இறப்பை குறித்து ஃபெமினா மிஸ் இந்தியா நிறுவனம், சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. அதில், சக்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, 'இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்' என குறிப்பிட்டது.
முன்னாள் திரிபுரா அழகி ரிங்கி சக்மா
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரிங்கி
கடந்த மாதம், ரிங்கி சக்மா தனது நோய் பற்றி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அப்போதுதான் அவர் வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார். அவர் நீண்ட காலமாக தனியாக போராடி வருவதாகவும், தனது உடல்நிலை குறித்து யாரிடமும் சொல்ல விரும்பவில்லை என்றும் அந்த பதிவில் கூறினார். அந்த பதிவில் சக்மா, தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினார். இதற்காக அறுவை சிகிச்சை செய்த பிறகும், புற்றுநோய் அவரது நுரையீரலிலும், பின்னர் அவரது தலையிலும் பரவியிருப்பதாக தெரிவித்தார். "என் மூளை அறுவை சிகிச்சை இன்னும் நிலுவையில் உள்ளது. ஏனெனில் இது ஏற்கனவே என் நுரையீரல் வரை, என் உடலின் வலது பக்கம் முழுவதும் பரவி உள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.