முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார்
ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய மாறுபட்ட திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேலுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேகலா சித்ரவேல் ஒரு எழுத்தாளர் ஆவார். இதற்கு முன், இவர் 'கமலி அண்ணி', 'ரதி தேவி வந்தாள்', 'வசந்தமே வருக' உள்ளிட்ட பல தமிழ் நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தற்போது பழம்பெரும் நடிகரான எம்ஜிஆரின் பாடல்களை ஆய்வு செய்து, அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எழுத்தாளர் மேகலா சித்ரவேலுக்கு இந்த முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இந்த பட்டம் வழங்கும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டு தன் தாயை ஊக்குவித்தார்.
பட்டம் பெற்றதற்கு பிறகு எழுத்தாளர் மேகலா சித்ரவேல் கூறியதாவது:
என்னை வெற்றிமாறன் தான் படிக்க வைத்தான். சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. பெணகள் நிறைய முன்னேற வேண்டும். அவர்களுக்கு வயது ஒரு தடையாக இருக்க கூடாது. வயதை காரணம் காட்டி அவர்களை யாரும் அடக்கவும் கூடாது. எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நடிகர் எம்ஜிஆர் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். நான் எழுதியதை படித்த எனது கைடு பேராசிரியர் பிரபாகர், அதை தொகுத்து வழங்கினால் எனக்கு முனைவர் பட்டம் கிடைக்கும் என்று கூறினார். இதுகுறித்து நான் வெற்றிமாறனிடம் கேட்டபோது, நான் கண்டிப்பாக அதை செய்யவேண்டும் என்று அவன் என்னை ஊக்குவித்தான். அதன்பிறகு, 4 ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டி அவனே என்னை படிக்கவும் வைத்தான். என்று கூறியுள்ளார்.