வேள்பாரி படத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏஆர் ரஹ்மானுடன் மீண்டும் கைகோர்க்கும் இயக்குனர் ஷங்கர்
வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி பிளே வெளியிட்டுள்ள இந்த தகவல் உறுதியானால், 2018ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமான இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷங்கர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்த படத்திற்கான பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, அவர் வேள்பாரி படத்தின் முன் தயாரிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேள்பாரி பிரபலமான தமிழ் நாவலான சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரியை அடிப்படையாக் கொண்டது மற்றும் மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
வேள்பாரியில் சூர்யா-விக்ரம் காம்போ
ஷங்கரின் வேள்பாரி படத்தில் சூர்யா முதன்மை வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு முக்கிய வேடத்திற்கு விக்ரம் அணுகப்பட்டுள்ளார். இது உறுதியானால் ஒன்பது ஆண்டுகளில் விக்ரம் ஷங்கருடன் இணைந்து பணியாற்றும் முதல் படமாகவும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடனான இரண்டாவது படமாகவும் இது இருக்கும். இந்தியத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக வேள்பாரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லட்சிய திட்டத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் 2025இல் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஆர் ரஹ்மான் ஷங்கர் காம்போ
இயக்குனர் ஷங்கர் ஜென்டில்மேன், காதலன், இந்தியன் மற்றும் முதல்வன் போன்ற தனது அனைத்து படங்களிலும் இசையைக்க ஏஆர் ரஹ்மானையே பயன்படுத்தி வந்தார். அதேபோல், கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2க்கும் ஷங்கரும் ரஹ்மானை அணுகியிருந்தார். இருப்பினும், அவர் அந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால், இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க முடியவில்லை. இறுதியில், ஷங்கர் இந்தியன் 2க்காக அனிருத் ரவிச்சந்தருடன் பணிபுரிந்தார். பின்னர் கேம் சேஞ்சருக்காக எஸ் தமனுடன் இணைந்தார். இந்நிலையில், அடுத்து வேள்பாரியில் தனது ஆஸ்தான இசைமையப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் இணைகிறார்.