தேசிய விருது வென்ற தமிழ் சினிமா இயக்குனர் மனைவியை பிரிவதாக அறிவிப்பு; அதிர்ச்சியில் ரசிகர்கள்
கோலிவுட்டின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சீனு ராமசாமி, தனது மனைவி ஜி.எஸ்.தர்ஷனாவை புரிவதாகவும், இதன்மூலம் தங்களது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது எனவும் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்,"அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்." என எழுதியுள்ளார்.
Twitter Post
சீனு ராமசாமியின் தொழில்முறை விவரங்கள்
விவாகரத்து பெறுவதற்காக குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார் சீனு ராமசாமி. "இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம்." என்று தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளராக தனது தொழில்முறையை துவங்கினார். பரத் நடிப்பில் 'கூடல் நகர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை உள்பட பல படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. இதில் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு அவர் தேசிய விருது வென்றார்.