பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வாருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது
ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில், பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வார் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹனி சிங் மற்றும் அவரது மனைவியிடையே அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்மானத்தை அவர்கள் எட்டிய நிலையில், டெல்லி குடும்ப நல சாகேத் நீதிமன்ற நீதிபதி பரம்ஜீத் சிங் அவர்களுக்கு விவாகரத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஹனி சிங் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ₹1 கோடி வழங்குவதாக அறிவித்ததை அடுத்து, அவரது மனைவி அவர் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார். முன்னதாக, குடும்ப வன்முறை புகாரில் ஷாலினி தல்வார், ஹனி சிங் மீது வழக்கு தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வந்த 13 ஆண்டு திருமண வாழ்க்கை
புகழ் பெற்ற ரேப் பாடகர் ஆன ஹனி சிங், ஷாலினி தல்வாரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு, டெல்லி நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். விசாரணையின் போது நீதிபதியிடம் ஹனி சிங், இனி எப்பொழுதும் மனைவியுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார். வழக்கறிஞர் இஷான் முகர்ஜி, ஹனி சிங்கிற்காக ஆஜரான நிலையில், இது இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வழக்கு எனக் கூறி கருத்து கூற மறுத்து விட்டார்.