ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பதிவு - மத்திய அரசு எச்சரிக்கை
கடந்த சில மாதங்களாக ஏஐ.,தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள் மற்றும் சாதனையாளர்கள் ஆகியோரின் முகங்கள் ஆபாச வீடியோக்களில் வரும் பெண்களின் முகங்களோடு மார்பிங் செய்து போலி வீடியோவாக வெளியிடுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், அண்மையில் நடிகை ரஷ்மிகா மந்தனா முகம் கொண்டு சித்தரிக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்புகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தநிலையில், அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தளத்தில் அந்த போலி வீடியோவை ஷேர் செய்து 'இதற்கான தக்க நடவடிக்கையினை எடுக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து தற்போது இந்த டீப் ஃபேக் வீடியோ விவகாரம் குறித்து மத்திய தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்
இது குறித்து அவர், 'இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பினை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்து வருகிறது' என்றும், 'தவறான வீடியோ அல்லது பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டால் அது 36 மணிநேரத்தில் நீக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் அந்த நபர் மீது விதி எண்.7ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், ஐபிசி விதிப்படி அந்த சமூக வலைத்தளம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்' என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற போலி வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராத தொகையும் விதிக்கப்படும் என்னும் விதி ஏற்கனவே உள்ளது என்பதையும் அவர் இந்த தருணத்தில் அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.