இறந்து 16 ஆண்டுகளுக்குப் பின் நிஜமான கொச்சின் ஹனீஃபாவின் கனவு இல்லம் நனவானது; திரையுலகினர் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரான கொச்சின் ஹனீஃபா மறைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் நீண்டகாலக் கனவு இல்லம் தற்போது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கொச்சி நகரின் வெண்ணலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்று அடுக்கு வீட்டிற்கு, கொச்சின் ஹனீஃபா ஆசைப்பட்டபடியே அவரது தந்தை ஏ.பி.முகமதுவின் நினைவாக கொச்சின் ஹனீஃபாஸ் ஏ.பி.மன்ஸில் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல சட்டப் போராட்டங்களை கடந்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவில், திரைத்துறை சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பிரமாண்ட இல்லம்
ஹனீஃபாவின் சொந்தச் சேமிப்பில் உருவான பிரம்மாண்ட இல்லம்
கடந்த 2010 ஆம் ஆண்டு கொச்சின் ஹனீஃபா மறைந்த போது, அவரது இரட்டை மகள்களான சாஃபா மற்றும் மர்வாவிற்கு நான்கு வயது மட்டுமே ஆகியிருந்தது.
அதன்பின்னர் அவரது மனைவி ஃபாஸீலா, கடந்த 16 ஆண்டுகளாகக் கடவந்த்ரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஹனீஃபாவின் சொத்துக்கள் தொடர்பான சட்ட சிக்கல்கள் அனைத்தும் நீங்கிய பிறகு, ஹனீஃபா சேர்த்து வைத்த சொந்த சேமிப்புப் பணத்தைக் கொண்டே இந்த 5 படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட வீடு கட்டப்பட்டுள்ளது.
வீட்டின் உள்கட்டமைப்புகளை அவரது மகள்களே நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
கடந்து வந்த பாதை
யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்த குடும்பத்தின் கடந்து வந்த பாதை
புதுமனை புகுவிழாவின் போது ஊடகங்களிடம் பேசிய ஹனீஃபாவின் மனைவி ஃபாஸீலா, "நாங்கள் யாளிடமும் ஒரு ரூபாய் கூட நிதி உதவி கேட்டு கையேந்தவில்லை.
பல சட்டப் போராட்டங்கள் மற்றும் சிரமங்கள் இருந்தாலும், ஹனீஃபாவின் ஆசைப்படியே அவரது சொந்த சேமிப்பைக் கொண்டு இந்த வீட்டைக் கட்டி முடித்துள்ளோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கணவரின் நினைவுகளைப் பாதுகாப்பதற்காகவே, உறவினர்கள் அழைத்தும் தனது சொந்த ஊரான தலச்சேரிக்கு செல்லாமல் கொச்சியிலேயே தங்கி வீட கட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நடிகர் திலீப்
16 ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவிய நடிகர் திலீப்
தங்கள் குடும்பத்தின் கஷ்ட காலத்தில் உறுதுணையாக நின்ற நடிகர் திலீப்பிற்கு ஃபாஸீலா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஹனீஃபாவின் சுயமரியாதையை நன்கு அறிந்த திலீப், ஹனீஃபா பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா காரை தனது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளாக அந்த குடும்பத்திற்குத் தேவையான நிலையான வருமானம் கிடைத்தது.
மகள்கள் இருவருக்கும் 18 வயது பூர்த்தியடைந்து சட்ட சிக்கல்கள் தீர்ந்த பிறகே, இந்த வீட்டைக் கட்டி முடிக்கும் சூழல் உருவானது.
பிரபலங்கள் பங்கேற்பு
திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு மற்றும் ஹனீஃபாவின் நினைவுகள்
இந்த நெகிழ்ச்சியான புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நடிகர் திலீப், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பல மலையாளத் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதிய வீட்டின் உட்புறங்களில் கொச்சின் ஹனீஃபாவின் அரிய புகைப்படங்கள், அவர் வென்ற விருதுகள் வைக்கப்பட்டுள்ளன.
16 ஆண்டுகாலக் கடின போராட்டத்திற்கு பிறகு ஹனீஃபாவின் குடும்பத்தினர் தங்களது சொந்தக் கனவு இல்லத்தில் குடியேறியுள்ளது திரையுலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.