நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழக முதல்வரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதோடு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். இன்று காலை 10.00 மணிக்கு சென்னை அடையார் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சின்னையா பிள்ளை 'சிவாஜி' கணேசன்
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி, விழுப்புரத்தில் பிறந்தார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது. இன்றளவும் தமிழ் சினிமாவில் 250 படங்களுக்கும் மேலாக நடித்த ஒரே நடிகர் அவரே!