வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண்
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நிதியுதவி அளித்துள்ளனர். இருவரும் சேர்ந்து பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹1 கோடியை கூட்டாக வழங்கியுள்ளனர். இதுகுறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கடந்த சில நாட்களாக கேரளா இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பேரழிவு மற்றும் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. வயநாடு சோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். நானும் சரணும் சேர்ந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ₹1 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள்
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு நடிகருமான அல்லு அர்ஜூனும், கேரளாவில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ₹25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். முன்னதாக, கடந்த வாரத்தில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ராஷ்மிகா மந்தனா மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் நன்கொடை அளித்திருந்தனர். மேலும், சனிக்கிழமையன்று ராணுவத்தில் கவுரவ அதிகாரியாக உள்ள மோகன்லால் தனது ராணுவ உடையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டை பார்வையிட்டார். அப்போது பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதியின் மறுவாழ்வுப் பணிகளுக்காக ₹3 கோடி நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.