திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில், இவர்கள் இருவரும் நடித்திருந்த லியோ படம் தொடர்பாக, திரிஷா குறித்த ஆபாச கருத்துக்களை மன்சூர் அலிகான் பதிவுசெய்திருந்தார். இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் அவரை வலியுறுத்தினா. இருப்பினும், மன்னிப்பு கேட்க மறுத்து வந்த மன்சூர் அலிகான், கடைசியாக அறிக்கை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகராக இருப்பவருக்கு பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்- நீதிபதி
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன்னுடைய பேட்டி தொடர்பான முழு வீடியோவையும் பார்க்காமல், தன் பெயருக்கு கலங்கம் விளைவித்து விட்டதாக, நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக தலா ₹1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம் என நீதிபதி மன்சூர் திறப்பு வழக்கறிஞரிடம் கூறினார். நடிகராக இருக்கும் நபரை பல்வேறு இளைஞர்கள் பின் தொடரும் நிலையில், பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என அவருக்கு தெரிந்திருக்க வேண்டுமென நீதிபதி கருத்து தெரிவித்தார்.
வழக்கு விசாரணை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
எந்த தப்பும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவரது தரப்பு வழக்கறிஞர், மன்சூர் பேசிய முழு காணொளியையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். மேலும் மன்சூரை பற்றி திரிஷா பதிவிட்டுள்ள ட்விட்டை நீக்க உத்தரவிடும்படியும் வாதிட்டார். இந்நிலையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டவுடன் பிரச்சனை தீர்ந்து விட்டதாக தெரிவித்த திரிஷா வழக்கறிஞர், மன்சூர் அலிகான் எதற்காக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் என தெரியவில்லை என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மன்சூர் அலிகான் வழக்கு குறித்து, திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.