லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த 'கோச்சடையான்' திரைப்படத்திற்கு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்கு உத்தரவாதமாக லதா ரஜினிகாந்த் கையொப்பம் போட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு வாங்கிய பணத்தினை திரும்ப தரவில்லை என்று அந்த தனியார் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு பெங்களூர் 6ம் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்த வழக்கில் காவல்துறை விசாரணை நடத்தியதில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்தது, தவறான அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது உள்ளிட்ட பிரிவுகளில் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கான குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிக்கையினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி லதா ரஜினிகாந்த், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் தரப்பு மேல்முறையீடு
அதன் பேரில் இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீதான இந்திய தண்டனை சட்டம் 199. 196, 420 உள்ளிட்ட பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது என்று கூறப்படுகிறது. அதனையடுத்து ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவுகளின் கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும் முதன்மை நீதிமன்றத்திற்கு அனுமதியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லதா ரஜினிகாந்த் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதன்மை நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.