சினிமாவின் கிங், அரசியலின் கிங் மேக்கர்; விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்
மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் இல்லாத அவரது முதல் பிறந்த நாள் இது என்பதால் ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம். 10ஆம் வகுப்பு வரை படிப்பு: மதுரை மண்ணின் மைந்தன் என அறியப்படும் விஜயகாந்த் 1952இல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த நிலையில், 10ஆம் வகுப்பிற்கு பிறகு படிப்பில் ஆர்வம் காட்டாமல், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சினிமா பார்த்து அதன் மீது ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டார்.
பணியாளர்கள் அனைவருக்கும் சரிசமமான சாப்பாடு
அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் கேரவன் எல்லாம் இல்லை. தனது படப்பிடிப்பு காட்சிகள் முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்பாமல், படப்பிடிப்பு பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும், இவர்தான் தனது படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் இலையில் சரிசமமான உணவு பரிமாறுவதை தொடங்கினார். இதன்பிறகே பலரும் இதை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கம்: நடிகர் சங்க கடனை அடைத்து பத்திரத்தை மீட்ட விஜயகாந்த் சொன்னால், ரஜினி மற்றும் கமல் போன்றவர்கள் கூட, அதை மறுக்காமல் செய்யும் அளவிற்கு செல்வாக்கு கொண்டிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கலைஞர் கருணாநிதிக்கு பொன்விழா எடுத்த வல்லமை கொண்டவர் ஆவார்.
சினிமா டு அரசியல்
சினிமாவில் அசைக்க முடியாத கிங்காக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த், 2005இல் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2006இல் 10 சதவீத வாக்கு வங்கியைப் பெற்ற விஜயகாந்த், 2011இல் ஜெயலலிதா தமிழக முதல்வராவதில் முக்கிய பங்கு வகித்து கிங் மேக்கராக மாறினார். அந்த தேர்தலில் சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்த தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்தடுத்த தேர்தல்களில் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பப்பட்ட நிலையில் அரசியல் சறுக்கல், உடல்நிலை சரியின்மை காரணமாக பின்னடைவை சந்தித்த அவர், 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.