இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது வழக்கு: பொம்மன்-பெல்லி தம்பதி குற்றச்சாட்டு
அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் இயக்குனர் தான் கார்த்திகி கோன்சால்வஸ். இப்படம் எடுக்கப்படும் பொழுதும், எடுத்து வெளியாகி விருது வாங்கும் வரையிலும் மிகவும் அன்பாக நடந்து கொண்ட இவர், அதன் பின்னர் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையுமே நிறைவேற்றவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் தொடர்பினை துண்டிக்கிறார் என்று பொம்மன்-பெல்லி தம்பதியினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற திருமண காட்சியினை எடுக்க தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்பதால் இந்த தம்பதிகளிடம் ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கியதாகவும், அதனையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு கார்த்திகிமீது வழக்கு தொடர்ந்துள்ள சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் ராஜ் தெரிவித்துள்ளார்.
பொம்மன்-பெல்லி தம்பதியை மிரட்டிய இயக்குனர்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியினத்தினை சேர்ந்த இத்தம்பதியினை மும்பைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்து சென்ற இயக்குனர் கார்த்திகி, அவர்கள் திரும்பிவர பணம் கூட கொடுக்கவில்லை என்பதனை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொம்மன்-பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையினை பின்னணியாக கொண்டே இப்படம் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியினை அடைந்து பல கோடி வசூலாகியுள்ள நிலையில், ஏழ்மையிலுள்ள அவர்களுக்கு சொந்த வீடு ஒன்றினை கட்டித்தந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாமா?என்றும் அவர் கூறினார். மேலும் கார்த்திகிக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியதும் அவர் உடனே பொம்மன்-பெல்லி தம்பதியினரை மிரட்டியுள்ளார் என்றும் பிரவீன் ராஜ் கூறியுள்ளார். இதனிடையே, கார்த்திகி தங்களை ஏமாற்றியிருந்தாலும் தாங்கள் அவர் மீது எவ்வித வழக்கினையும் தொடரவில்லை என்று பொம்மன்-பெல்லி தம்பதியினர் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.