
பிக் பாஸ் தமிழ் 9: இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவர்தான்?
செய்தி முன்னோட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டாவது வாரத்தை நிறைவு செய்யும் நிலையில், இந்த வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. வழக்கத்தைவிட இந்த முறை 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளதால், ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் அனல் பறக்கிறது. இதில் சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். முதல் வார முடிவில், போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் மன அழுத்தத்தால் நந்தினி தாமாக முன்வந்து வெளியேறினார்.
பிரவீன் காந்தி
பிரவீன் காந்தி வெளியேற்றம்
அவரைத் தொடர்ந்து, முதல் எலிமினேஷனாக பிரவீன் காந்தியும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதன் மூலம் முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், தற்போது ஒன்பது போட்டியாளர்கள் எலிமினேஷனை எதிர்கொண்டுள்ள இந்த வாரத்திற்கான வெளியேற்றம் குறித்த தகவல் கசிந்துள்ளது. ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான அப்சரா சிஜே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று நம்பகத்தன்மை அற்ற தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இதுவே தற்போது ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த வெளியேற்றங்களால், விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.