சல்மான் கான் படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ மெகா பிளான்
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இணைத்து ஒரு மெகா படத்தை திட்டமிட்டு வருகிறாராம். பாலிவுட் ஹங்காமா வெளியிட்டுள்ள செய்தியின்படி, அட்லீ, ரஜினிகாந்த் மற்றும் சல்மான் கான் மூவரும் அடுத்த மாதத்தில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்ச்சர்ஸ் ரஜினிகாந்தை சம்மதிக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
பாலிவுட் ஹங்காமா மேலும் தெரிவித்துள்ளதன்படி, "சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. அந்நிறுவனம் ரஜினிகாந்திடம் நெருக்கமான பந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ரஜினியிடம் சம்மதம் வாங்கி விடுவார்கள். அதேபோல அட்லீயும் சல்மான்கானிடம் பேசி வருகிறார். எனவே இந்த இரு நட்சத்திரங்களும் படங்களில் இணைவது கிட்டத்தட்ட உறுதி" சல்மான் கான் தற்போது 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார். அதே போல ரஜினியும், லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் 'ஜெயிலர் 2'-இல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அட்லீயின் புதிய படத்தின் தயாரிப்பு பணிகள் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.