தற்கொலை எண்ணங்களில் இருந்து மீண்டு வந்ததை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படை பேச்சு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில், ஆக்ஸ்போர்டு யூனியன் விவாத சங்கத்தின் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, தன்னுடைய இளம் வயதில் தனக்கும் தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும், ஆனால், தன்னுடைய தாயின் வார்த்தைகளால் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் தெரிவித்தார். "எனக்கு சிறுவயதில் தற்கொலை எண்ணம் வந்தபோது, 'பிறருக்காக வாழும்போது இந்த எண்ணங்கள் வராது' என்று என் அம்மா சொல்வார். இது என் தாயிடமிருந்து எனக்குக் கிடைத்த மிக அழகான அறிவுரைகளில் ஒன்றாகும்" என்று அவர் கூறினார். இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்த செய்தியின் படி, ஏ.ஆர்.ரஹ்மான், பிறருக்காக வாழ வேண்டும் என்ற தனது தத்துவத்தை பற்றி மேலும் விளக்கினார்.
ஊருக்காக வாழும் கலைஞன்!
"மேலும், நமது எதிர்காலம் பற்றிய ஞானம் குறைவாகவே உள்ளது. உங்களுக்காக அசாதாரணமான ஒன்று எதிர்காலத்தில் காத்திருக்கலாம். இந்த விஷயங்களை செய்வதாலும் மற்றும் 'நம்பிக்கை' என்ற ஒன்று உங்களிடத்தில் இருந்தால், அதுதான் வாழ்க்கையை தொடர வைக்கிறது". "சில சமயங்களில், நான் எல்லாவற்றையும் செய்துவிட்டதாக உணர்வேன், ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதை போல உணர்வேன். அப்போதெல்லாம், பிற்காலத்தில் ஏதோ ஒன்று பெரிதாக காத்திருக்கிறது என்ற உண்மை உரைக்கும்"என்று ரஹ்மான் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.