Page Loader
'பாலக் சாட்' முதல் 'குல்பி' வரை: அம்பானி வீட்டு திருமண விருந்தின் மெனு தெரியுமா?
திருமண நிகழ்வில், பிரபலமான உணவுகள் அடங்கிய விருந்தை எதிர்பார்க்கலாம்

'பாலக் சாட்' முதல் 'குல்பி' வரை: அம்பானி வீட்டு திருமண விருந்தின் மெனு தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
05:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திருமணம் செய்ய உள்ளார். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் பிரமாண்டமான திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்களும் கோலாகலமாக, நட்சத்திரங்கள் சூழ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ள திருமண நிகழ்வில், பிரபலமான உணவுகள் அடங்கிய விருந்தை எதிர்பார்க்கலாம். அம்பானிகள் திட்டமிட்டுள்ள ஆடம்பர மெனுவை ஆராய்வோம்.

மெனு விவரங்கள்

அம்பானி திருமணத்தில் இடம்பெறவுள்ள வாரணாசியின் பிரபல காஷி சாட் பண்டார்

திருமண மெனுவில் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காஷி சாட் பண்டாரின் சிறப்பு உணவுகள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகழ்பெற்ற உணவகத்தின் உரிமையாளர் ராகேஷ் கேசரி இந்த திருமணத்திற்கு அவரது ஸ்பெஷாலிட்டி உணவுகளான, டிக்கி, தக்காளி சாட், பாலக் பட்டா சாட், சன்னா கச்சோரி மற்றும் குல்பி போன்ற சாட் உணவு வகைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மணமகனின் தாயார் நீட்டா அம்பானி, கடந்த மாதம் வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் திருமண அழைப்பிதழ்களை வைத்து வணங்குவதற்கு வருகை தந்தபோது, இந்த மெனு முடிவு உறுதி செய்யப்பட்டது.

விவரங்களைப் பார்வையிடவும்

நீட்டாவின் வாரணாசி வருகையும், திருமண மெனுவும்

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆசிர்வாதம் கோரிய பின்னர், நேரே காஷி சாட் பண்டாரில் உள்ள பிரபலமான உணவு வகைகளை சாம்பிள் ருசி பார்த்தார் நீட்டா- இதன் வீடியோ ஆன்லைனில் வைரலானது. அதைத்தொடர்ந்து தனது மகனின் திருமணத்தில் இந்த உணவுகளை பரிமாறுமாறு கடை உரிமையாளர் கேசரியிடம் அவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. "நீட்டா அம்பானி எங்கள் சாட் பண்டாருக்கு வந்தார். அங்கு அவர் டிக்கி சாட், பாலக் சாட் மற்றும் குல்பி ஃபலூடாவை சுவைத்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மற்றும் பனாரஸின் சாட் மிகவும் பிரபலமானது என்று கூறினார்," என்று கேசரி ANI-யிடம் கூறினார். ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண விழா ஜூலை 12 தொடங்குகிறது. திருமண கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்புடன் முடிவடையும்.