மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய்
கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமான நடிகை, ஐஸ்வர்யா ராய். இவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆராத்யா பச்சன் என்று அழைக்கப்படும் அந்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர், டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், குறிப்பிட்ட சில யூட்யூப் சேனல்கள், தன்னுடைய உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருவதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர். ஆராத்யாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும், சில யூட்யூப் வீடியோக்களில், அவர் இறந்து விட்டார் என்றும் கூறப்பட்டது. இதுதான், ஆராத்யா தரப்பில் நீதிமன்ற தீர்வை அணுக காரணம்.
தவறான செய்திகள் பரவுவதை குறித்து கருத்து கூறிய ஐஸ்வர்யா ராய்
வழக்கின் தீர்ப்பு வந்த பிறகும், அது குறித்து பொதுவெளியில் பேசாதிருந்தார் ஐஸ்வர்யா ராய். இதனிடையே, நேற்று மும்பையில், 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ப்ரோமோஷனும், நிருபர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யாவிடம், தவறான தகவல்கள் பரவுவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. "ஊடகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் போலி தகவல் இருப்பதை அங்கீகரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே நீங்கள் வெளிப்படையாக அதை பரப்பபோவதில்லை என்று எங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகிறது. மேலும், நீங்கள் அதை ஊக்குவிக்கப் போவதில்லை என்று தெரிகிறது. எனவே எங்கள் உணர்வுக்கு நீங்கள் தரும் ஆதரவிற்கும், அதை அங்கீகரித்த உங்களுக்கும் மிக்க நன்றி" என்று ஐஸ்வர்யா ராய் கூறினார்.