நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவிருக்கும் டிஸ்னி+ஹாட்ஸ்டார்
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுக்குள்ள கொண்டு வர நடவடிக்கை எடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது அந்நிறுவனம். தற்போது நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து, டிஸ்னி+ஹாட்ஸ்டாரும் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ஓடிடி தளங்களான நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய தளங்கள் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்திய ஓடிடி சந்தையானது 2027-ம் ஆண்டிற்குள் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வளர்ச்சியை எட்டும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க ஹாட்ஸ்டாரின் நடவடிக்கை:
இந்தியாவில் 50 மில்லியன் பயனர்களுடன் ஓடிடி சந்தையில் 38% சந்தைப் பங்குகளைக் கொண்டிருக்கிறது டிஸ்னி+ஹாட்ஸ்டார். தற்போது வரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 10 சாதனங்களை வரை லாகின் செய்து கொள்ளும் வசதியை அளித்து வந்தது அந்நிறுவனம். பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் பொருட்டு, அதனை நான்காகக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது டிஸ்னி+ஹாட்ஸ்டார். அத்தளத்தின் ப்ரீமியம் சேவை பயனர்களில் 5% பயனர்கள் மட்டுமே நான்குக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்திருக்கின்றனர் எனவும், இதனால் இந்த புதிய கட்டுப்பாட்டை மிகக் கடுமையாக அமல்படுத்த வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பட்சத்தில், அதனை இந்த ஆண்டு இறுதியில் அந்நிறுவனம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.