நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு
தமிழ் படங்களில், துணை வேடங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் சமீபத்தில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னிடமிருந்து, தனக்கு நன்கு பரிச்சயமானவர்கள், ரூ 20000 திருடிவிட்டதாகவும், இது குறித்து தமிழக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் படி, "சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை" என கூறியிருந்தார். திருடியவர்களில் இருவருமே, பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர்கள் என்றும், ஒருவர் பைன்டர் மற்றவர் மெக்கானிக் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
"சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பதில்லை"
தற்போது அந்த திருடப்பட்ட பணத்தை மீட்டு, விநோதினியிடம் ஒப்படைத்துள்ளனர் காவல்துறையினர். அதையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வினோதினி. "என்னிடமிருந்து ரூ 20000 களவாடிய பெயிண்டரிடமிருந்து அந்த பணத்தை காவல்துரை நேற்று பெற்றுத்தந்தது. பணம் பறிபோன அன்றிலிருந்து எனக்கு இருந்த மன உளைச்சல் முக்கியமாக எதற்கென்றால் - நாம் ஒருவர் கண்ணிற்கு, அதுவும் இதே அபார்ட்மெண்டில் மேல் வீட்டிற்கு வேலை செய்து கொடுத்தவர் கண்ணிற்கு, ஒரு easy target ஆக தென்பட்டிருக்கிறோமென்று தான்" என வருத்தத்துடன் கூறியுள்ளார். அதோடு,"எல்லொரும் நினைப்பது, சினிமாவில் இருப்பவர்கள், பல கோடி சொத்து வைத்திருப்பார்கள். இது பல நேரத்தில் உண்மையாகவும் இருக்கலாம், ஏனெனில் அதிக பணம் புழங்கும் இடங்களில் சினிமாவும் ஒன்று. ஆனால், எல்லோரிடமும் அப்படி இருப்பதில்லை," எனக்கூறியுள்ளார்.