LOADING...
ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்: திரையுலகினர் இரங்கல்
ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்

ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்: திரையுலகினர் இரங்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2025
11:05 am

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மூன்றாவது மனைவியும், பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2025) மாலை காலமானார். அவரது மறைவு, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வயது தொடர்பான நோய்களால் கீதா ராதா அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ராதிகா தனது பிறந்தநாளை தாயாருடன் கொண்டாடிய நிலையில், ஒரு மாத காலத்திலேயே அவரது மறைவு செய்தி வெளியாகியுள்ளது. இது ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவரங்கள்

நடிகர் MR ராதாவின் மனைவி கீதா

நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு மூன்று மனைவிகள் மூலம் மொத்தம் 12 குழந்தைகள். அவர்களில் ராதிகா சரத்குமார், ராதா ரவி, நிரோஷா, எம்.ஆர்.ஆர். வாசு, ராஜு ராதா, மோகன் ராதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார் குடும்ப வாழ்க்கையிலும், சமூக சேவையிலும் பெரிதும் பங்களித்தவர் என்றும், அவரது மறைவு குடும்பத்திற்கு பெரும் இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். கீதா ராதாவின் உடல், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று (செப்டம்பர் 22, 2025) மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.