விவாகரத்து குறித்த செய்திகளுக்கு நடிகை அசினின் பதில்
'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். தொடர்ந்து போக்கிரி,கஜினி என பல வெற்றி படங்களில் நடித்தவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும், அமீர் கான், சல்மான் கான் என ஒரு சில நடிகர்களுடன் வெகுசில படங்கள் நடித்துவிட்டு, கடந்த 2016 -ஆம் ஆண்டு, மைக்ரோமாக்ஸ் என்ற செல்போன் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதும், சினிமாவை விட்டு ஒதுங்கிய அசினுக்கு, ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் புகைப்படங்களை மட்டும் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அசின், திடீரென, திருமண புகைப்படங்கள் உட்பட, தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும், இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதாக செய்திகள் வெளியானது.
நடிகை அசினின் பதில்
அது அசினின் காதுகளுக்கு எட்டியது போலும். உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் அசின். அதில், "இந்த செய்தி கேள்விப்பட்டபோது, நாங்கள் குடும்பமாக ஒரு ஜாலி டூரின் இடையே பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு. இதற்கு முன்னரும் எங்கள் திருமண தேதி முடிவெடுக்கும் போதும், நாங்கள் பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது. இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க. என்னோட டைம்-அ வேஸ்ட் பண்ணாதீங்க" என நடிகை அசின் பதிவிட்டு, விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.