ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேற்று நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்ட அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட்டன. அதில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைக்கவிருக்கும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.