'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்
அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, நடிகர் விஜயின் கட்சிக் கொடி அறிமுகம் குறித்து கேளிவியெழுப்பியதற்கு, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், துரைமுருகன் வயதான நடிகர்கள் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனக் கூறியது குறித்து பேசிய ரஜினிகாந்த், " துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நல்ல நட்பு தொடரும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் அதுகுறித்து எனக்கு வருத்தம் கிடையாது." எனக் கூறினார்.
ரஜினிகாந்தின் கருத்துக்கு துரைமுருகன் பதிலடி
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனும் தொனியில் பேசியதோடு, துரைமுருகனின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அவையில் இந்த கருத்து நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பின்னர் செய்தியாளர்கள் இதுகுறித்து துரைமுருகனிடம் கேட்டதற்கு, ரஜினிகாந்த் போன்ற வயதானவர்கள் இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்றார். இதனால், ரஜினிகாந்தின் பேச்சை அவர் ரசிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தே துரைமுருகனை நண்பர் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.