இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி
பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இருவரை தீ வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நர்கிஸ் ஃபக்ரி தமிழில் பிரஷாந்த் நடித்த 'சாகசம்' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சகோதரி அலியா ஃபக்ரி கடந்த நவம்பர் 23 அன்று குயின்ஸ் பரோவில் உள்ள ஒரு வீட்டின் கேரேஜுக்கு வேண்டுமென்றே தீ வைத்து, அவரது முன்னாள் காதலன் எட்வர்ட் ஜேக்கப்ஸ், 35, மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென், 33 ஆகியோரைக் கொன்றதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொலை குற்றம் சாட்டப்பட்ட அலியா
வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, ஜேக்கப்ஸ் உடன் காதலில் இருந்ததாகவும், அதன் பின்னர் பிரேக்-அப் ஆகிவிட்டதாகவும், அவர்களின் உறவை சமரசம் செய்வதற்கான அலியாவின் முயற்சிகளை ஜேக்கப்ஸ் நிராகரித்ததால், வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அலியா ஃபக்ரி மற்ற குற்றச்சாட்டுகளுடன் முதல் நிலை கொலை வழக்குகளை எதிர்கொள்கிறார். குற்றப்பத்திரிகையின்படி, ஆலியா ஃபக்ரி சம்பவத்தன்று காலை 6:20 மணியளவில் வீட்டிற்கு வந்து, தீயை மூட்டுவதற்கு முன்,"நீங்கள் அனைவரும் இன்று இறக்கப் போகிறீர்கள்" என்று கூச்சலிட்டுள்ளார். எரியும் கட்டிடத்தில் இருந்து தூங்கிக் கொண்டிருந்த ஜேக்கப்ஸை மீட்க எட்டியென் முயற்சித்துள்ளார். அவர்கள் இருவரும் புகையை சுவாசித்ததாலும், வெப்ப காயங்களாலும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அலியா தற்போது சிறையில் உள்ளார், மேலும் அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் எனக்கூறப்படுகிறது.