நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்த கிருஷ்ணா; பட பிரச்னை தான் காரணம் என விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் எதிரொலி, தற்போது கோலிவுட் திரை உலகிலும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்குக் கூடுதலாக சினிமா துறைப் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புதிய அமைச்சர் குறித்து நடிகர் விஷால் முன்வைத்த விமர்சனத்திற்கு, நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளக் கருத்து தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பதிவு
நடிகர் விஷாலின் பதிவு
புதிய அமைச்சரவையில் சினிமா துறைக்கான பொறுப்பு அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகியும் நடிகருமான விஷால் ஒரு பதிவிட்டிருந்தார். திரையுலகின் செயல்பாடுகள் மற்றும் அதன் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து எவ்வித முழுமையான அனுபவமும் இல்லாத ஒருவரிடம், சினிமா துறைப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.என்று விஷால் பதிவிட்டிருந்தார். இந்தத் திடீர் விமர்சனம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியது. "ஒருவருக்கு வாய்ப்பே கொடுக்காமல், அவர் தகுதியற்றவர் என்று எப்படி முன்கூட்டியே தீர்ப்பு எழுதலாம்? ராஜ்மோகன் ஏற்கனவே ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் சினிமா துறையின் அடிப்படை இயக்கங்களை அறிந்தவர்தானே" என்று விஷாலுக்கு எதிராகப் பலரும் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர்.
நேரடி சவால்
நடிகர் கிருஷ்ணா கேள்வி
இந்தச் சூழலில்தான், விஷாலின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுப் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார். கிருஷ்ணா தனது பதிவில், "நமது புதிய முதலமைச்சரும் (விஜய்) இந்த ஆட்சிப் பொறுப்புக்கு மற்றும் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவர்தானே... அங்கே (முதல்வர் மீது) எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை; ஆனால் ராஜ்மோகன் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?" என்று நேரடியாக விஷாலை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலுக்கு பிறகு பார்ப்போம்
பழைய மனக்கசப்பின் வெளிப்பாடா?
அரசியல் ரீதியான இந்த விமர்சனத்தைத் தாண்டி, கிருஷ்ணாவின் பதிவில் அவரது சொந்தக் கால அனுபவக் குமுறலும் வெளிப்பட்டுள்ளது. தான் ஒருமுறை பெரும் பிரச்சினையில் சிக்கியிருந்தபோது, திரையுலக அமைப்பில் இருந்த முக்கியப் புள்ளிகளிடம் (விஷால் தரப்பு) உதவி கேட்டு அணுகியதாகவும், அப்போது "தேர்தல் முடிந்த பிறகு பார்ப்போம்" என அலட்சியமாகக் கூறிவிட்டு, பின்னர் அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்றும் கிருஷ்ணா மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்தச் சண்டை வெறும் அரசியல் கருத்து மோதலாக மட்டுமில்லாமல், விஷாலுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பழைய தனிப்பட்ட மனக்கசப்பின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு பட வெளியீடு சம்மந்தப்பட்ட பிரச்னை என தெளிவுபடுத்தியுள்ளார்.
இருதரப்பு விவாதங்கள்
கோலிவுட்டில் விறுவிறுப்பாகும் விவாதம்
கிருஷ்ணாவின் இந்த அதிரடிப் பதிவைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விஷால் மற்றும் கிருஷ்ணா ரசிகர்கள் இரு பிரிவாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர். விஷாலின் ஆதரவாளர்கள் "சினிமா துறையைக் காப்பாற்ற விஷால் கேள்வி எழுப்பியதில் எவ்விதத் தவறும் இல்லை; கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது" என்று வாதிடுகின்றனர். கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் "இது சரியான பதிலடி! ஒருவருக்குக் குறைந்தபட்ச வாய்ப்புக் கூட வழங்காமல், ஆரம்பத்திலேயே அவரைத் தகுதியற்றவர் போலக் காட்டுவது உள்நோக்கம் கொண்டது" என்று கிருஷ்ணாவின் நிலைப்பாட்டை வரவேற்கின்றனர். விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணா, "நான் வழக்கமாக யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவன் கிடையாது. ஆனால், ஒருவருக்குத் திறமையை நிரூபிக்கக் களமே தராமல் முன்கூட்டியே விமர்சிப்பது நியாயமில்லை" என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Just a clarification
— krishna (@Actor_Krishna) May 25, 2026
The "issue"was a film release related issue.
The "election" was producer council elections.
Nandrigal my dear tweeple. https://t.co/xcGmkfDKDQ