இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிக்குமார் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதிக பிரம்மாண்டம் இல்லாமல், குறைந்த பொருட்செலவில் அதே சமயம் மண்வாசனை மிக்க படங்கள்தான் சசிக்குமாரின் டிரேட் மார்க் படங்கள். மதுரை மண்ணின் மைந்தரான சசிக்குமார், தொடக்க காலத்தில் இயக்குனர் பாலா மற்றும் இயக்குனர் அமீரின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த 2008 ஆம் ஆண்டு, சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என முப்பரிமாணம் எடுத்தார். அத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து, இன்று தமிழ் சினிமாவின் 'கல்ட்' கிளாசிக் படங்களில் ஒன்றாக மாறிப்போனது. இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது.
விருதுகளை அள்ளிய தயாரிப்பாளர் அவதாரம்
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் சசிக்குமார், இயக்குனர் பாண்டியராஜனை வைத்து 2009 ஆம் ஆண்டு பசங்க என்ற படத்தை தயாரித்தார். இத்திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. அதே ஆண்டு சசிக்குமார் தயாரித்து நடித்த படம் நாடோடிகள். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். அறிமுக இயக்குனரான எஸ் ஆர் பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் திரைப்படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.
தனித்துவமான கதைகளில் நடிக்கும் சசிக்குமார்
சசிக்குமார் ஒரு படத்தை தயாரிக்கும் போதும் சரி, அதில் நடிக்கும் போதும் சரி அவரின் திரைப்படத்தில் கதை எப்போதும் தனித்துவமாக இருக்கும். அவர் முதலில் தயாரித்த பசங்க படம் முதல், அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அயோத்தி திரைப்படம் வரை, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதை தனித்து நிற்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு, பாலா இயக்கத்தில் இவர் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படம் இவரின் நடிப்புக்கு எடுத்துக்காட்டு. தப்பாட்டக் கலைஞராக சன்னாசி வேடத்தில் வாழ்ந்திருப்பார் சசிக்குமார். இத்திரைப்படமே இளையராஜாவின் 1,000 ஆவது படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்காக இளையராஜா தேசிய விருதையும் பெற்றிருந்தார். எந்த கதையிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் சசிக்குமார் மென்மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.