மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் புகார்
செய்தி முன்னோட்டம்
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் குறித்து சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் ஆதாரமற்ற மற்றும் அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக நடிகர் அர்ஜுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்த நிலையில், அண்மையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா மட்டும் கலந்துகொண்ட நிலையில், உமாபதி பங்கேற்காததைத் தொடர்ந்து அவர்களது திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவின.
புகார்
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குணம் மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரி அர்ஜுன் புகார் அளித்துள்ளார்.
அன்ஜனாவின் திருமணத்தின் போது ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த யூகங்களுக்கு அவரது தனியுரிமையை மதித்து தான் கருத்துத் தெரிவிக்காமல் இருந்ததாக அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளதாகவும், ஐஸ்வர்யா விரும்பினால் உரிய நேரத்தில் அவரே விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதாரமின்றி ஒரு பெண்ணை மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவது உள்ளிட்ட இழிவான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்களது மௌனத்தை பலவீனமாகவோ அல்லது ஏற்றுக்கொள்வதாகவோ கருதக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
வருத்தம்
பொறுப்பற்ற ஊடகப் பிரிவுகளுக்கு வருத்தம்
உண்மைத்தன்மையை ஆராயாமல், பரபரப்பிற்காகத் தனிப்பட்ட தாக்குதல்களையும் அவதூறுகளையும் முன்னிலைப்படுத்தும் சில ஊடகப் பிரிவுகள் தங்களது பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்துவது வருத்தமளிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ அல்லது பெரிதாக்கப்பட்டாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அர்ஜுன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களின் கண்ணியமும் சுயமரியாதையும் சமரசம் செய்துகொள்ளக் கூடியவை அல்ல எனவும், எந்தப் பெண்ணும் தனது வாழ்க்கை முறையை வாழ்வதற்காகத் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் நடிகர் அர்ஜுன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.