2024-ல் ஓவர் பில்ட்-அப் கொடுத்து, பிளாப் ஆன படங்கள்!
ரஜினியின் லால் சலாம் முதல் கமலின் இந்தியன் 2, வரை இந்தாண்டு பல படங்கள் ஓவர் பில்ட்-அப் உடன் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், நம்மை சோதித்து சென்றன. படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர் மாறிமாறி படத்தைப்பற்றி தந்த ஓவர் ஹைப்-பும் படம் சோடை போனதிற்கு முக்கிய காரணமாக கருதலாம். இந்தாண்டு முடியும் நிலையில், 2024-இல் ஓவர் ஹைப் கொடுத்து வெளியாகி தோல்வியை தழுவிய படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
CD காணாமல் போனதால் தோல்வியை சந்தித்த லால் சலாம்?
லால் சலாம்: சமகால சூழலில் மத நல்லிணக்கத்தை பற்றி பேச இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த முயற்சியை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் படம் தோல்வியை சந்தித்தது. அதோடு படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய CD காணாமல் போனதால் தான் திரைக்கதையில் மாற்றங்கள் செய்யவேண்டியதாகி விட்டது என ஐஸ்வர்யா பின்னாளில் கூறியது விமர்சனத்திற்கு ஆளானது. ரத்னம்: இயக்குனர் ஹரியின் கம்பேக் படமாக பார்க்கப்பட்ட ரத்னம், பெரும் ஏமாற்றத்தையே தந்தது. படத்தோடு ஒட்டாத காமெடி காட்சிகள், தெறிக்க தெறிக்க ரத்தம் பார்த்த திரைக்கதை படத்தின் தோல்விக்கு காரணமாகி விட்டது.
ஷங்கரின் திரைவரலாற்றில் மாபெரும் தோல்வி படமாக மாறிய இந்தியன் 2
இந்தியன் 2: "சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா" வசனம் தொடங்கி, எல்லாமே உணர்ச்சிவிலக்கான மற்றும் அபத்தமான வசனங்கள் மற்றும் திரைக்கதை. ஒரு முதிர்ச்சியான நடிகர், திறமையான இயக்குனர் இணைந்து எடுத்த படம் போல இல்லாததே ரசிகர்கள் ஏமாற காரணம். தரமற்ற வசனங்கள், லாஜிக் இன்றி கதையாற்றுதல், தேவையற்ற ட்விஸ்டுகள் படத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. கூடவே பட ப்ரோமோஷனின் போது தரப்பட்ட பில்ட்-அப் ரசிகர்களை எரிச்சலூட்டியது. பிரதர்: ராஜேஷின் பலமான காமெடியை நம்பி எடுத்த பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறிய நிலையில் கடந்த சில வெளியீடுகளில் அந்த மாஜிக் வேலை செய்யவில்லை எனக்கூற வேண்டும். சென்டிமென்டு காட்சிகள் இருப்பினும் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லாமல் இருந்தது. ஜெயம் ரவிக்கு இது சோதனை காலம் போலும்!
புதுமைகள் இல்லாததால் அதிக பொருட்செலவு செய்தும் தோல்வியில் முடிந்த கங்குவா
ப்ளடி பெக்கர்: 'பிச்சைக்காரன்' ஆக கவினின் தோற்றம் படத்தின் மீது எதிர்பார்ப்பை எழுப்பியது. ஆனால், காமெடி, கருத்து மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகள் தங்களின் இடத்தில் சரியாக செயல்படவில்லை. சிறந்த காட்சிகள் தவிர்த்து பெரும்பாலும் கைவிடப்பட்ட காமெடிகள் மற்றும் உணர்ச்சிகள் பார்வையாளர்களை குழப்பின. கங்குவா: பெரிய எதிர்பார்ப்புடன் வந்த *கங்குவா* படத்தின் முதல் அரை மணி நேரம் புதுமை இல்லாமல் இருக்கின்றது. பிரமாண்ட செட்டுகள் மற்றும் போர்காட்சிகளோடு உணர்ச்சி ஒட்டாததால் படம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நடிகர் சூர்யா தன்னுடைய முழு உழைப்பை காட்டியும், சர்ப்ரைஸ்-ஆக கார்த்தியும் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெறவில்லை.