இனி ரயில் பயணங்களிலும் கூட நீங்கள் சோமாட்டோவில் ஆர்டர் செய்யலாம்!
இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளமான சோமாட்டோ (Zomato), தனது விநியோக சேவையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை செய்துள்ளது. தற்போது அவர்கள் ரயில்களிலும் விநியோகம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். முதல் கட்டமாக, இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து, Zomato இப்போது நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களுக்கு நேரடி உணவு விநியோகத்தை வழங்குகிறது. இந்த புதுமையான அறிவிப்பை சோமாட்டோ நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் X இல் ஒரு இடுகையில் பகிர்ந்துள்ளார்.
தீபிந்தர் கோயல் பதிவு
ரயில் டெலிவரிக்கு ஆர்டர் செய்வது எப்படி?
ரயில்களில் உணவினை ஆர்டர் செய்ய, Zomato ஆப் -ஐ பயன்படுத்தவும். டெலிவரி சர்ச் பாரில் "train" என்பதை உள்ளிட்டு, "Meals at Train Seat" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 10 இலக்க PNR எண்ணை வழங்கவும், உங்கள் உணவை டெலிவரி செய்ய விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து உணவகத்தைத் தேர்வுசெய்து, நீங்கள் விரும்பிய பொருட்களை கார்டில் சேர்க்கவும். உங்கள் சரியான இருக்கை எண்ணை உள்ளிட்டு, டெலிவரிக்குப் பிறகு கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
IRCTC கேட்டரிங் மூலம் உணவு டெலிவரி
ஏற்கனவே IRCTC இதே போன்றதொரு சேவையை நடைமுறையில் வைத்துள்ளது. அதன்படி, நீங்கள் புக் செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் உங்களுக்கு உணவு டெலிவரி செய்யும் ஆப்ஷன் வழங்கப்படும். இதற்கான லிங்க், நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்தபோது தந்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த லிங்கில் நீங்கள் பயணப்படும் ட்ரெயின் நிற்கும் ஸ்டேஷன்களும், அங்கே டெலிவரி செய்யப்படும் உணவு விடுதிகளும் உங்களுக்கு காட்டப்படும். நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட விடுதியையும், உணவு பட்டியலையும் தேர்வு செய்த பின்னர், அவர்கள் உங்கள் இருக்கைக்கே உணவினை டெலிவரி செய்து விடுவார்கள். இது தூர பிரயாணம் செய்பவர்களுக்கு வசதியான ஒரு தேர்வாக பார்க்கப்படுகிறது.